"ஹலோ தலைவரே, இந்தமுறை சட்ட மன்றக் கூட்டம், எதிர்பார்க்கப்பட்ட ரசாபாச சம்பவங்கள் ஏதுமின்றி, வழக்கம்போல் நல்லமுறையில், விறுவிறுப்பாக நடந்திருக்கிறது.''”
"ஆமாம்பா, கரூர் விவகாரத்தை பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் கையில் எடுப்பார்கள் என்று சிலர் கூறி வந்தார்கள்...''”
"உண்மைதாங்க தலைவரே, கரூர் சம்பவத்தின் முழுமுதற்காரணியே நடிகர் விஜய்தான். சரியாகத் திட்டமிடாத அவருடைய பிரச்சாரப் பயணம்தான் அங்கு நடந்த எல்லா அசம்பாவிதங்களுக்கும் காரணம் என்பதை, அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றன. அதனால்தான், குற்றச்சாட்டுப் பந்தை ஆளுங்கட்சிப் பக்கம் வலுவாக யாரும் இந்தக் கூட்டத்தில் வீசவில்லை. வழக்கம்போல் ஜாலியாகவே சட்ட மன்றக் கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு நடத்திக்கொண்டுபோனார். கரூர் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரி விப்பதற்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் கையில் கருப்புப் பட்டையை அணிந்துசென்றதைப் பார்த்த சபா நாயகர், "என்ன எல்லோருக்கும் ரத்த அழுத்தமா? கையில் பட்டையுடன் வந்திருக்கிறீர்களே?' என்று கேட்டு, ஒட்டுமொத்த சபையையும் சிரிக்க வைத்திருக்கிறார்.''”
"சட்டமன்றக் கூட்டம் காரணமாக, நாகை பகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய பா.ஜ.க. நயினார், அங்கு போகவில்லையே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரையில் தன் பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார், நாகை செல்லவேண்டிய திட்டத்தை, சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வசதியாக, திடீரென மாற்றிக்கொண்டு மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் என சென்னையைச் சுற்றியே பிரச்சாரம் செய்யும்படி மாற்றிக்கொண்டார். இதைப்பார்த்த பா.ஜ.க.வினர், இப்படி ஏதாவது காரணங்களுக்காகப் பிரச்சார டூரை மாற்றிக்கொண்டேயிருந்தால், அவர் எப்படி தமிழ்நாட்டின் 234 தொகுதிக்கும் போய்ச்சேருவார்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.''”
"சரிப்பா, அதெல்லாம் இருக்கட்டும். மீண்டும் கவர்னர் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டாரே?''”
"விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம்போல், மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வந்த அவரை, சுப்ரீம் கோர்ட் கடிந்துகொண்டதுடன், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலநிர்ணயம் செய்து உத்தரவிட்டது. இதனால் ஓரிரு மசோதாக்களைத் தவிர, மற்ற மசோதாக்களை அவசர அவசரமாக க்ளீயர் செய்தார் கவர்னர். இதனால், தி.மு.க. அரசுக்கும் அவருக்கும் இடையே நீடித்துவந்த மோதலும் சர்ச்சைகளும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், அவரிடம் நிலுவையில் இருந்த கலைஞர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களுக்கான ஒப்புதலை அவர் வழங்குவார் என முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்க்க, கவர்னரோ, தனது பழையபாணியில் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதனால் எரிச்சலான முதல்வர், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடியிருக்கிறார். கவர்னர் மீண்டும் தமிழக மக்களின் எரிச்சலை சம்பாதித்திருக்கிறார் என்று ராஜ்பவனே முணுமுணுக்கிறது.''”
"பா.ஜ.க.வுக்காக விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் ஆடிட்டர் குருமூர்த்தியே, அவரது டிமாண்டைப் பார்த்து மிரண்டுபோய் விட்டாராமே?''”
"அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட் டணியை ஒருங்கிணைத்த ஆடிட்டர் குருமூர்த்திதான், இப்போது த.வெ.க தலைவர் விஜய்யையும் இந்தக் கூட்டணியில் இணைக்கும் முயற்சி யில் இறங்கி யிருக்கிறார். விஜய்யிடம் இது குறித்து அவர் பேசியபோது, பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு நாங்கள் வரவேண்டும் என்றால் குறைந்தபட்சம், நாங்கள் கேட்கும் 100 தொகுதிகளை எங்களுக்குத் தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கே 100 என்றால் எடப்பாடி கேட்கும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொடுப்பது எப்படி? ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு எங்கிருந்து தொகுதி யைத் தருவது? என்றெல்லாம் குருமூர்த்தி, குழம்பிப்போய்விட்டாராம். ஆனால் எடப் பாடியோ, "கவலையே படாதீங்க?, விஜய்க்கு இப்ப இருக்கும் நெருக் கடியில் நம்ம கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை. அதனால் நாம் கொடுப்பதை, அது 30 சீட்டாக இருந்தாலும் அவர் வாங் கிக்கொண்டுதான் ஆக வேண்டும்' என்று சொல் கிறாராம்.''”
"ஆடிட்டரைத் தாண்டியும் எடப்பாடியுடன் விஜய் தரப்பு பேசிக்கொண்டிருக்கிறது என்கிறார்களே?''
"த.வெ.க. தலைவர் விஜய்யின் அந்தரங்க உதவியாளராக இருக்கும் ஜெகதீஸ், பெரிய சினிமா ஃபைனான்ஸியராம். ஜெ.’ உயிரோடு இருந்தபோது, அ.தி. மு.க. ஆட்சிக் காலத்தில், மதுரை யில் இருந்தபடியே இது சசிகலா பணம், இது ஓ.பி.எஸ். பணம், இது மந்திரிகள் பணம், இது, தி.மு.க. தரப்பின் பணம் என, அன்பு என்கிற ஃபைனான்ஸியர்தான் அவற்றை எல்லாம் கோலிவுட்டில் பெரிய அளவில் முதலீடாகப் புழங்கவிட்டார். அவரைப் போலவே ஜெகதீஸ், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி தொடங்கி, மாஜி அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரது பணத்தையும் சினிமாத் துறையில் புழங்கவிட்டு வருகிறாராம். எடப்பாடிக் கும் நடிகர் விஜய்க்கும் இடையே இவரும் பாலமாக இருந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம்.''”
"கரூரில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செய்யும்படி, தன் கட்சியினருக்கு விஜய் உத்தர விட்டிருக்கிறாரே?''”
"கரூர் துயரம் குறித்து பெரிய அளவில் கருத்து சொல்லாமலும், பொது வெளிக்கு வந்து இரங்கல் சொல்லாமலும் இருந்துவந்த த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய், சுப்ரீம் கோர்ட்டில் தங்கள் கட்சி தொடர்ந்த வழக் கில் தீர்ப்பு வரட்டும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த மாதிரியே அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். இதனால் ஆனந்தத் தாண்டவ உற்சவம் த.வெ.க. வில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கரூர் சம்பவத்திற்காக தனது கட்சியினருக்கு முதன்முதலாக உத்தரவு பிறப்பித்துள்ளார் விஜய். அதாவது, 41 அப்பாவிகள் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, தமிழ்நாடு முழுவதும் அவர்களின் போட்டோக்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். இதையடுத்து இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் கள் த.வெ.க.வினர். இதன்மூலம் விஜய் தரப்பு, பிராயச்சித்தம் தேடுவதாகப் பார்க்கிறார்கள் தமிழக மக்கள். இதற்கிடையே, மகாபாரதப் போர் தொடங்கும்போது அரவானை பலிகொடுத்தது போல, நமது அரசியல் குருச்சேத்திரப் போரில் 41 உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்ற ரீதியில் சில நிர்வாகிகள் பேச, இப்படியா லூசுத்தனமா பேசறது என்று த.வெ.க. தொண்டர்களே எரிச்சலானார்களாம்.''”
"கரூர் சம்பவத்தில் எதிர்பார்க்கப்பட்ட த.வெ.க. பிரமுகர்கள் மீது கைது நடவடிக்கை பாயவில்லையே?’''’
"ஆமாங்க தலைவரே, அந்த சம்பவத்தில் த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் மீது கரூர் மாவட்ட காவல்துறை, வழக்கைப் பதிவு செய்தது. அதேபோல, சென்னை போலீஸ் த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பிரிவின் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது, மற்றொரு புகாரில் வழக்கைப் பதிவு செய்தது. ஆனால், ஆனந்தும், நிர்மல் குமாரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தலைமறைவு ஆனார்கள். எனினும் அவர்கள் விஜய்யை ரகசியமாக சந்தித்தபடியே இருக்கின்றனர். அதேபோல, ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாகவே இயங்கி வருகிறார். பேட்டியும் கொடுக்கிறார். அவரையும் போலீஸ் நெருங்கவில்லை. கரூர் சம்பவத்தில் த.வெ.க.வுக்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தந்திருப்பதால், இவர்களை கைது செய்வதிலிருந்து போலீஸ் பின்வாங்கித் தயங்குவதாக, காவல்துறையிலேயே பேச்சு அடிபடுகிறது. அதே சமயம், சோசியல் மீடியாக்களில் அவதூறு பரப்பியதாக பலரையும் போலீஸ் கைது செய்துவருகிறது.''”
"தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் சிலவற்றின் அதிர்ச்சியூட்டும் திட்டங்கள், பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் பலிக்கவில்லை என்கிறார்களே?''”
"மதப் பிரச்சினையை உண்டாக்கினால்தான், இந்து மதத்தை வலுவாக இங்கே நிறுவமுடியும் என்று, சில மாதங்களுக்கு முன், இந்துத்துவா மாநாட்டில் பகிரங்கமாகவே காவித் தரப்பினர் சிலர் குரல் கொடுத்தனர். அதேபோல மதுரை திருப் பரங்குன்றத்தில் அவர்கள் எதிர்பார்த்த கலவரம் வெடிக்காமல், அங்கே வெள்ளைக் கொடி பறக்க விடப்பட்டது. தென்மாவட்டத்தில் அரங்கேறிய ஆணவப் படுகொலையில் கவின் என்ற இளைஞர் பலியான போதும், சாதிக்கலவரம் மூளும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்களாம். அங்கும் அரசுத் தரப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. சிவகங்கை கோயில் ஊழியர் அஜித், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்விலும் எதிர்பார்த்த கலவரம் வெடிக்கவில்லையாம். இந்த வரிசையில் கரூர் சம்பவத்திலும் ஏதேனும் வெடிக்காதா? என்று அவர்கள் எதிர்பார்க்க, அங்கும் சட்டம் ஒழுங்கு லகானைத் தமிழக அரசு, இறுக்கமாகப் பிடித்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. எனவே, அவர்கள் கண்ட கனவுகள் கலைந்து போனதில் எல்லாம் எரிச்சலில் இருக்கிறார்களாம்.''”
"கேரள டூருக்குப் போன இடத்தில் மாணவியிடம் எல்லை மீறிய சேரன்மாதேவியைச் சேர்ந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறாரே?.''
"ஆமாங்க தலைவரே, நெல்லை மாவட்ட சேரன்மாதேவியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அண்மையில் படிப்பு விசயமாக கேரள மாநில கொச்சி, மூணாறு பகுதிக்கு டூர் சென்றிருக் கிறார்கள். அப்போது, பாதுகாப்புக்குச் சென்ற பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த தாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பேராசிரியரை சக மாணவர்கள் தட்டிக் கேட்ட நிலையில், அந்தப் பேராசிரியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனே ஸ்பாட்டுக்கு வந்த சேரன்மா தேவி போலீசார், பேராசிரியரின் புகாரின் பேரில் நான்கு மாணவர் களைக் கைது செய்திருக்கிறார்கள். அதே சமயம், மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், சம்பந்தப்பட்ட கல்லூரியின் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தினரும் காவல் துறையினரும், மாணவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த வில்லங்க பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறதாம்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். சென்னை விமான நிலையத்தின் முதன்மை கமிஷனர் தமிழ்வளவன் மற்றும் டெபுடி கமிஷனர் ஹரேந்திர சிங் பால் ஆகிய இருவரும் அதிரடியாக டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரித்தபோது, சரக்குகளைக் கையாள்வதில் நடந்த ஊழல், தங்க நகை ஏற்றுமதி வர்த்தகத்தில் முறைகேடு, தங்க நகைகளை கவரிங் நகை என பொய்ச் சான்றளித்து வரி ஏய்ப்பு மோசடி ஆகிய குற்றங்கள் நடப்பதற்கு இவர்கள் உடந்தையாக இருந்ததால்தான் இந்த அதிரடி மாற்றம் என்றார்கள்.''’
________________________________________________
இறுதிச் சுற்று!
முதல்வர் அஞ்சலி!
கலைஞரின் நிழல் என வர்ணிக்கப் பட்டவர் சண்முகநாதன். கலைஞரின் உதவியாளராகவும், தோழராகவும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகநாதன் மறைந்தார். இவரது மனைவி யோகலட்சுமி. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறை வால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் 16-10-2025ஆம் தேதி காலமானார் யோகலட்சுமி. இதனைக் கேள்விப்பட்டு துயரமடைந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், சண்முகநாதனின் தேனாம் பேட்டை இல்லத்திற்கு விரைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த யோகலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம்!
பல்கலைக்கழக மசோதாக்களுக்கு அனுமதியளிக்காமல் அவைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை பேசிய முதல்வர் ஸ்டாலின், "பேரவையில் நிறை வேற்றப்படும் சட்ட முன்வடிவின் மீது கருத்துச் சொல்ல ஆளு நருக்கு எந்த உரிமையும் இல்லை. சட்டப்பேரவை விதிகளுக்கும், அரசியலமைப்பு சாசனத்திற்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை ஆய்வு செய்யவேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம்'' என்றார். இதனையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-இளையர்